அரசியல் ரீதியிலான தாக்கங்கள்/ பாதிப்புக்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

விளக்கம்:

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதவி வகித்த அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் செயல்கள் குறித்து ஆராய அதிவிசேட வர்த்தமானி ஊடாக மூன்று அங்கத்தவர்கள் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி நியமித்தார். ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட வேண்டிய காலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியாகும். கடந்த அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட பொலீஸ் பிரிவுகளான ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) ஆகிய பிரிவுகளும் விசாரிக்கப்பட வேண்டிய தரப்பாக அடையாளம் காணப்பட்டன.

இந்த ஆணைக்குழுவானது நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ள ஊழல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட விடயங்களையும் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியது.

நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ள பல விசாரணைகளுக்கு முடிவுகளை/தீர்வுகளை காணும் முகமாக விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனுமதி கோரி 2021 ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஓர் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரசாங்க சேவை ஆணைக்குழு, பொலீஸ்மா அதிபர், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் தொடர்புடைய அமைச்சு மற்றும் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலர்கள் என அனைத்து மட்டத்திலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துகைகளை செயற்படுத்துவதற்கு அனுமதி கோரி பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயமானது இதுவரை நிறைவேற்றப்படவுமில்லை விவாதிக்கப்படவுமில்லை. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது அதிகாரங்களை பிரித்தல் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் என்பவற்றுக்கு கடுமையான சவாலாக விளங்கலாம்.

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

  • நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளை சட்டத்தின் படிமுறைகளிலிருந்து ஒதுக்கி வைக்க இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முயல்கின்றன.
  • நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கையானது அதிகார பிரிப்புக்கு (அதாவது குறித்த அதிகார சபைக்கு/ நிறுவனத்திற்கு உரித்தான அதிகாரங்களுக்கு) அச்சுறுத்தலாகும்.
  • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல், பொது நிதியினை தவறாக பயன்படுத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தல் தொடர்பிலான வழக்குகளே இன்னும் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ளன, இவை அனைத்தும் ஊழலுடன் தொடர்பான சம்பவங்கள் ஆகும்.
  • ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தல், அதன் மூலம் விசாரணை மேற்கொள்பவர்களிடம் சாதகமான விளைவினை உருவாக்குதல்.

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,[i] பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டாலி சம்பிக்க ரணவக்க,[ii] அனுரகுமார திஸாநாயாக்க[iii] மற்றும் சரத் பொன்சேகா[iv] ஆகியோர் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக அரசியல் ரீதியான தாக்குதல் என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

என்ன செய்ய முடியும்?

  • ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எந்தவொரு இடையூறுமின்றி தீர்வு காண வலியுறுத்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தல்.
  • தொழிநுட்ப தவறுகள் என வாபஸ் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்தல்.
  • நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே தெளிவான வேறுபாடு மற்றும் அதிகார பிரிவுகள் வேண்டி கோரிக்கையினை முன்வைத்தல்.
  • விசாரணை அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல்.

 

[i] http://www.adaderana.lk/news/75834/ranil-files-petition-against-recommendations-of-pcoi-on-political-victimization

[ii] https://newsradio.lk/blog/local/petition-against-political-victimization-pcoi-in-court-today/

[iii] https://www.newsfirst.lk/2021/03/24/anura-kumara-files-petition-with-ca-against-pcoi-recommendation/

[iv] http://www.adaderana.lk/news/72154/fonseka-files-writ-application-against-recommendations-of-pcoi-on-political-victimization